திருவிவிலியம் - உரூத்தின் வரலாறு - கலிவெண்பாவில்

திருவிவிலிய உரூத்தின் வரலாறு



மோவாப் படலம்



எலிமெலேக்கு தன் குடும்பத்துடன் பஞ்சம் பிழைக்க மோவாபு நாட்டிற்கு சென்று அங்கு மரித்தல்



அறனார் திருத்தேசம் வந்தபின் சீலர்
அறனாள இல்லை அரசன் -அறத்தை

இனங்காக்க நிற்க இனத்திலுள் வாழ்ந்த
இனச்சிறியோர் நீதி பதியாய் -தனதின்

இனத்தை எதிரிகள் கையினின்று மீட்க
இனத்தார் இடையே வழக்கு -அனைத்திற்கும்

வந்தார் இனமீட்பர் தேடி இனத்தாரும்
அந்நாட்கள் நீதி செழித்தது -அந்நாள்

இறைவனை விட்(டு)விலக பஞ்சம் நிலத்தில்;
இறைநகர் அப்பமூர் விட்டு -நிறையோன்

எலிமெலேக்கு சென்றான் நகோமி துணைசேர்
கிலியோன்மக் லோன்தனைய ரோடு -அலைந்தவன்

மோவாபு நாட்டில் பிழைக்கவே ஓடியவர்
மோவாபில் வாழ்ந்தார் மகனோடு -மோவாப்

இனத்தில் இருபெண்டிர் கொண்டார் மகற்கு
இனம்விட் டிருவர் மணந்து -இனத்தான்

கிலியோன் ஒருபாள் மணமுடிக்க மக்லோன்
மலராளாம் ருத்தை மணஞ்செய் -மலர்ந்ததே

வாழ்வு வெளிநாட்டில் ஆங்கு இனத்தவர்
வாழ்மூன்று ஆண்கள் மரித்து

ரூத் கலி 1

ஒர்பாள் பிரிதலும், ரூத் நகோமியை விட்டு பிரியாது யூதா தேசம் வருதலும்.



கைம்பெண்கள் மூவர் திகைநிற்க சீரவள்
கைம்பெண் நகோமி உரைத்தனள் -ஆம்பிள்ளாய்

விட்டுப் பிரிந்தனர் நம்கணவர் நம்மைத்தான்
மட்டில் அழுதோமே நாமிங்கு -கிட்டெவரும்

தேற்றுவகை யில்லா தழுதனர் பெண்டிரவர்
மாற்றுமணம் செய்தே சிறப்பாக -ஏற்றவாழ்க்கை

தேடிட மோவாப் இனத்துள்ளே போம்பெண்டிர்
வாடா மலர்களே சீர்மக்காள் -நாட

இனியெனக்கு பிள்ளை பிறக்குமோ யிங்கு
இனப்பெண்காள் பிள்ளை பிறந்து -மனம்வளரும்

நாள்வரை காத்திருக்கக் கூடுமோ பெண்டிர்காள்
வேள்வதைக்க வைத்தாரே கைதனை -ஆள்காண்

அழுதழுது கண்வீங்கி யாங்கவர் நாவும்
தழுதழுத்து பேசி ஒருபாள் -விழையிலாது

போனாள் பிரிந்து மலரூத்தோ போகாத
தேனோ அறிகிலாள் தாயவள் -தேனேயென்

பெண்ணேபோ வாழ்வாய் நலமாக என்றும்நீ
மண்ணில் சிறப்பாக என்சொல -விண்ணார்

திருவே உமதெனது உம்மினம் எந்தன்
திருவினமே விண்ணவரே சான்று -திருவாம்

உமைவிட்டுப் போகேன் பிழையது தானே
இமைப்பொழுதும் உம்மை அகன்றால் -எமைத்திரு

வாதை தருவாரே; நானகல மாட்டேன்சீர்,
மாது உரைத்தாள் சிறந்தங்கு -மேதவள்

நீர்மரிக்கும் பூமியில்தான் நான்மரிப்பேன் மாண்பதுவே
சீர்நிலத்தில் கர்த்தர் திருமீட்க -நேர்செல்ல

ஊண்சேதி கேட்டு நகோமி புறப்பட்டாள்
வீண்மகளாய் நாடு திரும்பு

ரூத் கலி 2

பெத்தலை படலம்



யூதேயாவிற்கு நகோமி ரூத்துடன் திரும்பிவர மக்கள் வியத்தல், ரூத் வேலைதேடி செல்லுதல்



எலிமெலேக்கின் நற்றுணைவி ஈதோ நகோமி
நிலம்விட்டுச் சென்றவளோ சீராள் -இலாதிழந்து

கைம்பெண்ணாய் வந்தேன் கசப்பு பெயரினி
கைம்பெண்ணாள் மாறாள் எனச்சொல்வீர் -கைம்பெண்ணாள்

பின்னொருநாள் ரூத்தும் இனநிலம் சென்றுநான்
அன்றாட அப்பத்தின் நெல்லெடுக்கப் -பின்போவேன்

தன்னிலத்தில் நெல்லறுப்போர் வீழ்நெல்லை நான்பொறுக்கி
பின்வந்து சோறுசெய்வோம் நாமுண்ண -என்பெண்ணே

போய்வா மருமகளே பெத்தலை ஊராரில்
சேய்நீ, திருகாப்பார் என்சொல்லி -தாய்சொற்

படிசென்றாள் பெத்தலையின் சீர்நிலங்கள் நோக்கி
படிநெல் கிடைக்குமோ என்றே -அடித்திட

ஊரார் வெளிநிலத்தில் நெல்லை அறுத்திட
சீராள் எளிமையோள் ஏழைநான் -யாரேனும்

கண்ணோட்டம் கொண்டிங்கு நெல்பொறுக்க விட்டிடுவார்
மண்ணில்வீழ் நெல்லைநான் சேர்த்து

ரூத் கலி 3

போவாசு நிலத்தில் தானியம் பொறுக்கச் சென்றவளை போவாசுடைய வேலையாள் நல்லபடி நடத்திட, போவாசு ரூத்தைக் கண்டு யாரிவள் என்று வினவுதலும்.



தற்செயலாய் போன திருநிலமோ நல்லாளாம்
மற்றவர்போல் போபோ யெனவிரட்டா -நற்றவன்

போவாசு மேனா ளிடம்சீர் உரைத்திருந்தான்
ஏவா விடுமெளியோர் என்றங்கு -ஏவா

எளியோள் வரக்கண்ட மேனாள் சுளியா
வெளியாள் பொறுக்க விடுக்க -எளியோள்

பொறுக்கினாள் வீழ்நெல்லை கீழின்று கையில்
பொறுக்கியோள் மண்ணை விலக்க -அறுநிலம்

பெத்தலை விட்டு நிலம்வந்த போவாசு
அத்தவர் உங்களோடு நிற்கட்டும் -அத்தமரோ

பின்சொன்னார் வாழ்த்து திருவும்மை வாழ்த்தட்டும்
என்றங்கு பெண்ணின்றாள் சேர்ந்தவள் -என்னயிது

பெண்ணிவள் கண்டதிலை யாரோ எனக்கேட்டு
மண்வீழ்நெல் தன்னை எளியோர்கள் -மண்விட்டு

கையெடுக்க விட்டுவிடும் நீதி உமதின்சொல்
கையெடுக்க விட்டேன்ரூத் மாதவளை -கையாள்

நகோமியின் பின்வந்த பெண்ணவள் தானே
வகைநன்றாய் செய்தவள் என்றே -அகவழகை

கேட்டேன் அழைத்தனுப்பு பெண்ணினிதாள் பேசிடுவேன்
நாட்டான்நான் தேற்றிச் சிறந்தவளை -நாட்டான்

அதுபோல பெண்ணவளை யாரும் அதட்டி
வதைக்கா திரும்வேலை யாரும் -மதிகெட்டு

மாதவள் மேல்கையும் போடா திருமென்றேன்
ஏதே தெளியா ளென

ரூத் கலி 4

மதிய வேளை பசிக்காக போவாசு உணவைத் தருதல்



பெண்ணவள் கைசேர்க்க நெற்கட்டு தன்னின்று
மண்ணில் சிலகதிர்கள் வீழச்செய் -அண்ணி

நகோமி பசித்திருப்பாள் வீட்டில் எனவே
வகைவிடும் நெல்நிறைய என்று -வகைநாணி

பெண்வந்து நிற்க நிலம்விட்டு வேறெங்கும்
பெண்ணேநீ போகாதே; நெல்பொறுக்கி -பெண்நீயும்

போவாய்; இளைத்தால் குடிநீர் அருந்திடு
மேவிகாக்க ஆணையிட்டேன் நானிங்கு -மேவிநீர்

ஏனோ எனக்காக கண்ணோட்டம் தந்தீர்சீர்
நானோ இதற்குத் தகுதியோ -வானார்

திருவாழ்த்து ஈதே எனக்கீந்தார் ஈவு
திருவாழ்த்தி ஆங்கே வணங்க -திருவூண்

மதியம் புசிக்குமவ் வேளையில் கையில்
எதுவுமிலா நின்ற மடந்தை -வதைக்கண்டு

போவாசோ: சாறொடு சோறைப் பிசைந்துன்ணு
நீவந்து ஊண்பசி தீர்

ரூத் கலி 5

ருத் பொறுக்கிய தானியத்தை தூற்றி வீடு செல்லுதல்



காலைமுதல் மாலைவரை கால்கடுக்க வேலைசெய்து
வேலைசெய் மக்கள்பின் சிந்திட்ட -காலது

பட்டிடா நெல்தன்னை சீராய்ப் பொறுக்கியவள்
பட்டில்லா சேலைதனில் சேர்த்தனள் -மட்டில்லா

நெல்விழச் செய்ததால் முந்தானை ஆனதே
நெல்கட்டிப் பூவிழியாள் கர்ப்பமோ -அல்லவே

காலையில் மெல்லிடையாள் இப்போதோ கர்ப்பமோ
வேலையாள் மெய்சிலிர்க்க நெல்லொன்றும் -சீலை

விழாதவள் கட்டினாள் சோலையவள், கட்டி
அழவிடாக் கர்த்தரை போற்றி -அழகியும்

மாலைவர தூற்றினாள் நெல்தனை பெண்ணவள்
காலையில் கைவீசி வந்தவள் -மாலையிலோ

நெல்லெடுத்துப் போனாள் ஒருபடி வீட்டிற்கு
நல்லவரைப் போற்றித் துதித்தனள் -அல்லாளும்

மாலையில் வீடுவர பெண்ணை நகோமியாள்
காலைமுதல் வேலையெங்கு செய்தாயோ -காலைபோன

பெண்வரக் காத்திருந்தேன் நான்வழிக் கண்டிங்கு
பெண்ணே உரைப்பாய் சிறந்தெனக்கு -மண்ணிலே

பெண்ணவள்: மாமி, வயல்சென்றேன் நெல்பொறுக்க.
மண்ணில்வீழ் நெல்பொறுக்க நல்லவர் –பெண்ணழைத்து

பெண்ணேநீ யாரெனக் கேட்டு அறிந்தவர்
கண்ணோட்டம் தந்தார் சிறந்து

ரூத் கலி 6

போவாசு தனக்கு இரங்கிச் செய்ததை ரூத் நகோமியிடம் சொல்லுதல்



போவாசு என்ற பெயருடைய சீராரே
ஏவா திருமிவளை என்றவர் –மேவாளை

சொல்லி இரங்கி விடச்செய்தார் நெற்கட்டு;
எல்லாம் பொறுக்கி எடுத்துவந்தேன் -நல்லநெல்

காணிதை மாமிநீர் சீர்நெல் எடுத்திட்டேன்
காணியில் சீராக விட்டாரே –மேணவர்

வேலையாட்கள் நோக்கி பிறப்பித்தார் ஆணையே
வேலையவள் காத்திடும் என்றவர் -வேலை

அறுவடை சீராய் முடியும் வரையில்
சிறப்பாக வந்து பொறுக்கு –அறனவர்

சொன்னார் வயல்வர என்னிடம், நாளையும்
அன்னார் வயல்செல்வேன் நான்நாளை -அன்னார்

மதியம் பசிக்தீர சோறோடு சாறும்
இதோயிந்த நெற்பொரியும் தந்தார் –இதோநீரும்

உண்ணுமிதை என்றே கரங்கொடுக்க மாமியும்
உண்டு பசிதீர்த் தனள்கேள்மின் -கொண்டு

அறுவடை செய்துதீரு மட்டும் வயல்போய்
பொறுக்கினாள் நெல்லைச் சிறந்து –அறுவடை

செய்தப்பின் கட்டுகள் போரடிப்பார் போவாசு
செய்கை அறிந்தவள் தாய்

ரூத் கலி 7

கைம்பெண்ணிற்கு வாழ்வுதரும் படலம்



போவாசு சுதந்திரவாளி அவனோடு நீ போய் படுத்துக்கொள் என்று நகோமி ரூத்திற்கு சொல்லுதல்



என்மகளே ரூத்பெண்ணே என்னழகே வாமகளே
என்பொறுப்பு உன்வாழ்க்கை தானன்றோ –என்மகளே

சீரவரின் நீதி பிரமாணம் கேட்டுள்ளேன்
சீராணே உந்தனின் ஆள்கேளாய் -சீரவன்

கைம்பெண்ணை மீட்டிட சீரவர் சொல்படி
கைம்பெண் உனக்கவனே ஆதலால் –கைம்பெண்ணின்

ஆடை களைந்திட்டு நீயழகாய் வேறுடுத்தி
வாடா முகத்தோடு செல்மகளே -தேடியே

நீபூசு நாறெண்ணெய்; நெற்போர் அடிநிலம்
நீபோவாய் இன்றிரவு காணாது –நீபோய்

அடித்தபின் உண்(டு)குடித்து போவான் உறங்க
அடிபோவாய் காலருகே போர்வை -அடியாள்

உடன்சேர போர்த்திட, நேரவன் சொல்வான்
உடன்செய் வகைதனை ஆங்கு –மடிசேர

பிள்ளைதர யூத குலத்தவன் சொந்தமாமே,
பிள்ளாய் விரைவாய் நிலம்

ரூத் கலி 8

ரூத் போவோசோடு தூற்றும் இடத்தில் இரவில் படுக்க, போவாசு சுதந்திரவாளி வேறாள் என்று உரைத்தலும்



மாமியின் சொல்கேட்டு ரூத்தோ தலைகுனிந்து
மாமியின் சொல்சரியே என்றவள் –மாமிசொல்

சேர்ந்தனள் நெல்லடி யாருமங்கு காணாது
சேர்ந்தாள் மறைந்து இரவுதனில் -நேர்சீர்

இரவிலே போவாசு உண்(டு)குடித்து வந்து
அரைத்தூக்கம் தள்ளாட ஆங்கு –தரையிலே

போர்த்துறங்க பெண்ணும் மறைவிட்டு வந்தவள்
போர்வைநீக்கி காலருகே தூங்கவும் -நேர்மகன்

நள்ளிரவில் ஆணும் புறம்படுக்க கால்பட
துள்ளி எழுந்தா னதிர்ந்தங்கு –மெள்ள

எவரோ எனக்கேட்க பெண்ணாள் பகன்றாள்
தவனே மணநியதி ரூத்சீர் -தவமகளே

யானில்லை நேமத்தின் பிள்ளை, மகளேகேள்
வானங்கீழ் கர்த்தர் நியமஞ்சொல் –மானார்

இருக்கிறார் வேறொருவர் பெத்தலையில் சீராண்
தரவிருப்பில் என்றா லெனதாம் -இருந்தும்

இளைஞரின் பின்போகா வன்சீர் பெருமாள்
அளையாது வந்தாய் இனமுன் –களையே

நியமத்தை மீறுவது ஆதலால் காணப்
பயல்பேசு வேன்நான் விரைந்து

ரூத் கலி 9

போவாசு வேறு சுதந்திரவாளியுடன் பேசி, அவர் ஏற்காததால் ரூத்தை மணம்புரிந்து ஓபேத்தை பெறுதல்



பெண்ணேபோ காணாது காலை விடியுமுன்
மண்சொந்தம் கேட்டுரைப்பேன் இன்றேநான் –பெண்போகும்

முன்தந்தான் ஆறுபடி நெல்லை அளந்தங்கு
என்னே சிறப்பாணின் மாண்பது -தன்மனதுள்

பெண்போனாள் மாமியிடம் சொல்ல இனத்தாளும்
பெண்ணே அவன்சீராண் சொல்சரி –மண்ணிலே

சொன்னதை செய்தவன் தீரளவும் தூங்கானே
அன்னவன் நல்லவன் சீர்கேளாய் -என்னாளும்

மஞ்சத்தில் வந்தாலும் நீதி வழுவாத
அஞ்சும் திருவாளன் விட்டனன் –மஞ்சம்சேர்

நாணம் விடுத்த திருமங்கை வாழ்க்கையை
காணல் விடுத்திட செய்திடக் -காணவே

சொந்த இனத்தானைத் தேடி நகர்வாயில்,
அந்தத் தமன்வரக் காத்தனன் -அந்தாணோ

பெத்தலையின் மூப்பர் அழைத்துவந்தான் பத்துபேர்
பெத்லகேம் ஊரான் எலிமெலெக்கு –தத்தமாய்

காணியை விற்க நகோமி அழைத்தனள்
காணியை வாங்குவீரோ நீர்சீரோய் -காணது

காணிதானே என்றவரும் வாங்குவேன் என்றுசொல்ல
காணியோடு மக்லோன் மனையாளை –காணிவாங்கும்

நீர்சேர்ந்து சீரவள் பிள்ளைபெற வைக்கவேண்டும்
சீர்சொல்ல நேராண் மறுத்தனன் -சீர்சொன்ன

காணியென நான்சொன்னேன் வாங்குவேன், சொந்தவளோ
காணீர்நீர் மோவாப் இனத்தாளாம் –வீணது

பேச்சு நிலம்வேண்டாம் என்றே மறுத்திட
பேச்சிற்கு மூப்பரே சான்றென -பேச்சின்

நியமம் படியே நகர்வாயில் தன்னில்
பயலவர் காலணி நீக்கு

ரூத் கலி 10

மோவாபிய பெண்ணான ரூத்தின் வழியில் தாவீதும் இயேசுவும் பிறந்தனர்



இளைய வயதில் கணவன் இழந்த
இளையோரின் வாழ்வு வளமாய் -களிப்புடன்

வாழவே சீரிறை தந்தார் இனத்துள்ளே
வாழும்நற் சீராணே வாழ்வுதர -வேழாண்

அனைத்தும் சரியாகச் செய்தவன் பெண்ணாள்
மனம்போல் மணந்தான் சிறந்து -மனம்போல்

மணந்தபின் சீரவனும் பெண்சேர ஆங்கு
இணைந்தவர் பெற்றாரே பிள்ளை –குணத்தாண்

இனத்தவர் இட்டார் பெயரது ஓபேத்
நனிநகோமி வாய்சிரிப்பாள் என்று -நனியவன்

சல்மோன் வழிவந்த போவாசு பெற்றனன்
நல்லாணாய் ஓபேத் சிறப்பாணே –நல்லாணும்

பெற்ற நிறையவன் ஈசாய் சிறப்பாணும்
பெற்ற மகனேதா வீது

ரூத் கலி 11
மாமியொடு போரிடும் வன்னாய் மருமகள்கள்
ஆமிந்த பூமியில் உண்டுபலர் -மாமியாரைக்

கைவிடாது வந்தனள் ரூத்சீராள்; சீரவர்
கைவிடாதார் என்றென்றும் வாழ்தருவார் -மேவியே

மோவாபு வேறின மென்றே விடுத்தனர்
ஈவைச் சிலரங்கு; ஆங்கேசீர் -தேவனார்

மேன்மகன் தாவீது முன்தாயாய் மோவாபு
நன்மகள் தன்னைத் தெரிந்தாரே -நன்கர்த்தர்

தன்கையின் செய்கையில் என்றென்றும் பாராரே
வன்வேறு என்றவரும்; சீராளின் -இன்வழியில்

தாவீது வந்தான் தலைமுறை மூன்றிலே
வேதவர் மீட்பர் இயேசுவும் -வேதம்சொல்

நல்லவர் வந்தாரே அவ்வழியில் தானிங்கு
நல்லவரைப் போற்றுவேன் நான்

ரூத் கலி 12

Comments

Popular posts from this blog

முழு வேதாகமம் வெண்பா வடிவில்